top of page

Long Distance Runner (Tamil)

Grace Paley

க்ரேஸ் பேலி (1922-2007) அமெரிக்காவின் நியூயார்க் மாநகரத்தில் வாழ்ந்த எழுத்தாளர், கவிஞர், ஆசிரியர் மற்றும் அரசியல் போராளி. தன் வாழ்நாளில் மூன்று சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்ட க்ரேஸ் பேலி சிறுகதை வடிவத்தின் சாத்தியங்களை விரிவாக்கியவர் என்று கொண்டாடப்படுகிறார். பெண்களின் உலக இருப்பைப் பற்றிய நுட்பமான, ஆழமான பார்வை பேலியின் சிறுகதைகளில் பிரமிக்கவைக்கும் ஒளியுடன் வெளிப்படுகிறது. பெண்களின் உரிமைக்காகவும் போர்களுக்கு எதிராகவும் தன் வாழ்நாள் முழுவதும் அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டுவந்த க்ரேஸ் பேலி, எளிய மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தியே தன் படைப்புகளைக் கட்டமைத்ததார். இந்த இயல்புகளை ‘நெடுந்தூர ஓட்டக்காரி’ சிறுகதையிலும் காணலாம்.


மூல ஆங்கிலதிலிருந்து தமிழில்: என் கல்யாண் ராமன்

எனக்கு நாற்பத்தி இரண்டு வயது நிறைவதற்கு சற்று முன்போ பின்போ ஒரு நாள் நான் நெடுந்தூர ஓட்டக்காரியாக மாறினேன். சிறிது தாட்டியாகவும் இந்த விழைவுக்குப் பலவழிகளில் தகுதியற்றவளாகவும் நான் இருந்தபோதிலும் தொலைதூரம் போக விரும்பினேன், அதுவும் விரைவாக; ஆனால் மிதிவண்டிகளையும் ட்ராம்களையும் போல விரைவாக அல்ல; சாய்ந்த கண் யோனியைக் கொண்டிருக்கும் தீவுகள் என்று கப்பல் மாலுமிகள் பேருந்து நிலையங்களில் தூரதேசப் பயணங்களைப் பற்றிப் உரையாடும்போது குறிப்பிடும் தாய்பே, ஹிங்வான் போன்று வெகுதொலைவிலும் அல்ல. இந்த நாட்டைச் சுற்றிச் சுற்றியும், கடல் பக்கத்திலிருந்து பாலங்கள் வரையும், என் பழைய பேட்டையின் தெருக்களினூடே ஓரிரு முறையும் – இப்படித்தான் ஓட விரும்பினேன். நகர்ப்புறப் புத்தாக்கம் என்னையும் அத்தெருக்களையும் தீர்த்துக் கட்டுவதற்கு முன்பாகவே இதைச் செய்ய ஆர்வமாக இருந்தேன்…

தொடக்கத்தில், வனங்களடர்ந்த கனேடிகட் மாநிலத்தில், வசந்தத்தின் பூ மொட்டுகள் பெருகியிருந்த. குழைக்காட்டுப் பகுதிகளினூடே ஓட முயன்றேன். படைப்பில் எல்லாமே ரகசியம் என்பது உண்மைதானே? எனவே, என்னை யாரும் அறிந்திராத, அகண்ட பரப்புடைய, புறநகர் குன்றுகளில் ஓட்டப்பயிற்சி எடுத்தேன். வசந்த காலத்தில் டாக்வுட் மரங்கள் பூக்கும் தருணத்தினூடாகவும், பின் வாகை மலர்ந்த பருவத்திலும் நான் ஓடினேன். தன் பருத்த தொடைகளைப் பாதி மட்டுமே மறைத்திருக்கும் பட்டுச் சல்லடத்தை அணிந்திருந்த சீமாட்டியான என்னை சில தருணங்களில் வழியில் நிறுத்தி நான் ஏன் ஓடுகிறேன் என்று மக்கள் கேட்டதுண்டு. போகிற போக்கில் பதில் சொல்லுவேன். யாராவது நெருக்கிக் கேட்கும்போது மட்டுமே நின்று, நிதானித்து பதிலளிப்பேன். கையில்லாத வெள்ளை உள்பனியனையும் அணிந்திருந்தேன். வயதான ஆண்கள் மற்றும் போலிக் கூச்சமுடைய சிறுவர்களின் கவனத்தை ஈர்க்காமலிருப்பதற்குத் தோதாக அந்த உள்பனியன் மிகச் சிறந்த ஏந்தலைக் கொண்டிருந்தது.

பிறகு கோடைக்காலம் வந்தது. என் கால்கள் வலுவாக இருப்பதாக உணர்ந்தேன். என் பிள்ளைகளுக்கு முத்தமிட்டு விடைகொடுத்தேன். அப்போது அவர்களுக்கு நன்றாகவே வயதாகியிருந்தது. எப்படியும் பிரிந்து செல்வதற்கான தருணத்தை நாங்கள் நெருங்கியிருந்தோம். அண்டை வீட்டுக்காரியான திருமதி ராஃப்டரியிடம் அவ்வப்போது வீட்டுக்கு வந்து அவர்களைப் பார்த்துக்கொள்ளும்படியும், அவள் வழக்கமாக சமைக்கும் படுமோசமான அயர்லாந்து நாட்டு இரவுணவை அவர்களுக்கு கொடுக்கும்படியும் கேட்டுக்கொண்டேன்.

அவர்களும் எப்போது வேண்டுமானாலும் கிளம்பிப் போகலாம் என்று என் பிள்ளைகளிடம் சொன்னேன். ’வெளியேறி உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையைத் தொடருங்கள்’ என்று அறிவுறுத்தினேன். ’என்னை மட்டும் அதில் சேர்க்காமல் தனியே விட்டுவிடுங்கள்.’

’புத்திசாலிகளுக்கு ஒரு சொல்…’ என்றான் ரிச்சர்ட்.

’நீ மனச் சோர்வடைந்திருக்கிறாய், ஃபெய்த்’ என்றாள் திருமதி ராஃப்டரி. ’பெரிய மன்மதன் என்று நீ நினைக்கும் உன் சிநேகிதன் ஜாக் உன்னை இன்னும் அழைக்கவில்லை. எனவே, ஞாயிற்றுக்கிழமையைக் கண்ட உண்ணி போல் வாட்டமடைந்திருக்கிறாய்.’

’இந்த நாட்டார் கூளமெல்லாம் என்கிட்ட வேணாம், ராஃப்டரி’ என்று நான் முனகினேன். அவளுடைய கண்களில் நீர் நிறைந்தது. எனெனில், அதுதான் அவள்; கால் பெருவிரலிலிருந்து கொண்டை உச்சிவரை அவள் நாட்டார் கூளம்தான். அதனால்தான் அவள் எனக்குப் பிடித்துப்போனாள். அதனால்தான் அவளை நான் நேசித்தேன், உருவாக்கினேன், சகித்துக்கொண்டேன்.

நான் கதவைத் தாண்டி வெளியேறியபோது ரிச்சர்ட், டாண்டோ, திருமதி ராஃபடரி ஆகிய மூவரும் தொலைக்காட்சிப் பெட்டியின் முன் சாய்ந்துகொண்டு ”செய்திகள்” நிகழ்ச்சியைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தார்கள். ”செய்திகள்” நிகழ்ச்சி, சில நகரும் படங்களைக் கொண்டு, உண்மையாகவே சந்திரனுக்கு ஒரு பயணம் நடந்தேறியிருந்ததையும் ஆப்பிரிக்காவும் தென்னமெரிக்காவும் வெஞ்சினம்கொண்ட மேகச் சுருளுக்குள் ஒளிந்துகொண்டதையும் நிறுவிற்று.

’வரேன்’ என்றேன் நான். ’சரி, கிளம்பு’ என்றனர் அம்மூவரும்.

உங்களுக்கு அப்படித்தான் என்றால் பரவாயில்லை’ என்று உரக்கக் கத்தினேன். பிறகு. ப்ரைட்டன் கடற்கரைக்குச் செல்லும் சப்வேயில் ஏறிக்கொண்டேன்.

ப்ரைட்டன் கடற்கரையை அடைந்ததும், உடை மாற்றுவதற்காக ”உப்புக் காற்று பெட்டக அறை”-க்குச் சென்றேன். இருபது ஆண்டுகளுக்கு முன் என் அப்பா அந்த அறையின் எதிர்காலத்தில் ஐநூறு டாலர் முதலீடு செய்திருந்தார். இப்பவும் அவருக்கு ஆண்டொன்றுக்கு மூணரை டாலர் வருகிறது. .அந்தப் பணம் (சட்டப்படி) ”ஜூடியாவின் குழந்தைகள்” இல்லத்துக்கு நேரடியாகப் போய்ச்சேர்ந்து, அவர்களுடைய பணத் தட்டுப்பாட்டை சிறிதளவேனும் குறைக்க உதவுகிறது.

மென்மையான காற்தடங்களுடன் நான் லாவகமாக ஓடத் துவங்கியபோது யாருமே என்னை அவ்வளவாக கவனிக்கவில்லை. தொடக்கத்தில் நான் பலகைப் பாதையில் ஓடினேன், ஒரு காலத்தில் என் அம்மா துண்டறிக்கைகளை வழிப்போக்கர்களுக்கு கொடுத்த இடத்தைக் கடந்தேன். அந்த இடம், ஒரு ஐஸ்க்ரீம் வண்டிக்கும் சிதிலமடைந்த மணற்குன்றுக்கும் இடையே இருந்தது. அமெரிக்க வணிக நிறுவனங்களின் கொடுரத்தைத் தடுத்து நிறுத்தும் முகமாக, என் அம்மாவை அவளுடைய தோழர்கள் அந்த இடத்தில்தான் நிற்கப் பணித்திருந்தனர்.

நான் சற்று நேரம் நின்று அந்த நீண்ட கடற்கரையின் அழகை மெச்ச விரும்பினேன். நியூயார்க் நகரத்தைப் பற்றிப் பாராட்டுணர்வுடன் எண்ணுவதற்காகவும் அங்கே நிற்க விரும்பினேன். நியூயார்க் நகரத்தைப் போல அழகிய பழுப்பு நிறத்தையும், மணற்பாங்கையும், ஆங்காங்கே மினுமினுக்கும் துகள்கள் போன்ற குடிமக்களையும் தன் உவர்த்த விளிம்புகளில் கொண்டிருக்கும் அழுகிப் போன நகரங்கள் வேறெவையுமில்லை. ஆனால் நான் என் வாழ்க்கையின் பெரும்பகுதியை படுத்துக்கொண்டும், நின்றுகொண்டும் குறிக்கோளின்றி வெறித்துப் பார்த்துகொண்டும் கழித்திருந்தேன்; இனி ஒடுவது என்று முடிவெடுத்துவிட்டேன். ஏறக்குறைய ஒன்றரை மைல் ஓடிய பிறகு, பலகைப் பாதையிலிருந்து இறங்கி என் பழைய பேட்டைக்குள் நுழைந்து ஓடத் துவங்கினேன். நன்றாகவே ஓடிக்கொண்டிருந்தேன். என் மூச்சு சீராகவும் ஆழமாகவும் இயங்கியது. என்னுடைய உடலின் இயங்குதிறனைப் பற்றிப் பெருமிதத்துடன் நினைத்துக்கொண்டிருந்தேன்.

திடீரென்று ஏறக்குறைய முந்நூறு கருப்பர்களால் சூழப்பட்டேன்.

’நீ யார்?’

’யாரது?’

’பார் அவளை! சரியாப் பாரு! இதவிட தாட்டியான சூத்தாமட்டையை எப்பவாவது பார்த்திருக்கியா?’

’பாவம், அவ. மனசு சரியாயில்லை போலிருக்கு. பசங்களா, அவள விட்டுடுங்க. சரியான விஷமக்காரப் பசங்க.’

’ஒரு காலத்தில் நான் வசித்தது இங்கேதான்’ என்றேன்.

’ஆமாமாம்’ என்றார்கள். ’அது பழைய காலம். வெள்ளைக்காரங்க இருந்த காலம்.. அவ்வளவு மோசமான காலம் நெலைக்குமா? நெலைக்கல.’

’ஆனா எங்களுக்கு இங்கே ரொம்பப் பிடிச்சிருந்தது. ஃப்ளாட்புஷ் நிழற்சாலைக்கோ டைம்ஸ் சதுக்கத்துக்கோ நாங்க போனதே இல்ல. இந்தத் தெருதான் எங்களுக்கு சொர்க்கமா இருந்தது.’

’கெட்டி முலை. கஷ்டம்தான். என்ன செய்யறது?

’உன் பேச்சு எனக்குப் பிடிச்சிருக்கு’ என்றேன். ’உருவகத்தையெல்லாம் சேர்த்து.’

’அப்படிச் சொல்லு.. பேசப் பேச எங்களுக்கு அதெல்லாம் தானே வருது.’

’ஆமாம். என் சனங்களும் ஒரு தினுசாத்தான் பேசுவாங்க. அப்புறம் ஐரிஷ்காரங்களையும் சொல்லணும். அவங்களுக்கு ரொம்ப வாய்ச் சாதுரியம்.’

’யாரவங்க?’ ஒரு சின்னப் பையன் கேட்டான்.

’போலீஸ்காரங்க.’

’இப்பல்லாம் போலிஸ் படையில ஐரிஷ்காரங்களைத் தவுத்து மத்தவங்களும் இருக்காங்களே’ என்று குறிப்பிட்டேன். ’நீ சொல்றது சரிதான்’ என்றனர் இரு சீமாட்டிகள். ’ இருக்காங்கதான். நிறைய பேர் இருக்காங்க. ஃப்ரென்சுகாரங்க, சீனாக்காரங்க, ரஷ்யாகாரங்க, காங்கோலேர்ந்து வந்தவங்க. ஓ அம்மிணி, நீ சொல்றது ரொம்பவே சரி.’

’அதோ, அந்த வீட்டிலேதான் நான் இருந்தேன். பிறந்ததிலேருந்து கல்யாணம் ஆகிறவரைக்கும் அந்த அடுக்கக வீட்டுலதான் இருந்தேன்.’

’ஒரே இடத்துல இருக்கறது ரொம்பவே நல்லது. எங்கம்மா அப்படித்தான் தென் கரோலினா மாநிலத்துல இருந்தாங்க. ஒரே இடம். அவங்கப்பாவுக்குத் விவசாயம்தான் தொழில்னு சொன்னாங்க. குளிர்காலமோ, போர்க்காலமோ, கெட்ட காலமோ, எதுவாயிருந்தாலும் அந்த குடும்பத்துல எல்லாரும் வேளைக்குச் சாப்பிட்டாங்க.. ரூஸ்வெல்ட்! அவர் செஞ்சது எப்பேர்ப்பட்ட விஷயம். பிரமாதமில்ல? அப்புறம் அங்கே குளிராது! ஒசரம் ஒசரமா மரங்க!’.

’அதோ, அந்த அபார்ட்மெண்டுதான்.’ நான் அண்ணாந்து சுட்டிக்காட்டினேன். ’அங்கேதான். மூணாவது மாடி.’

அவர்கள் அனைவரும் அண்ணாந்து பார்த்தார்கள்.

‘அதனாலென்ன? பிதற்றும் பிசாசே!’ என்றான் ஒரு கருப்பின இளைஞன். அவன் கம்பி ஃப்ரேம் வைத்த மூக்குக்கண்ணாடி அணிந்திருந்தான். ஒருகாலத்தில் நான் சிடி காலேஜ் பையன்களை முதன்முறையாக பார்த்தபோது அவர்களுக்கிருந்த புத்திசாலிக் களை இவனுக்குமிருந்தது.

இகழ்ச்சியிலும் கோபத்திலும் அவர்களுக்குத் தலைமை தாங்கி வழிநடத்துபவன் போல் அவன் தோன்றினான். அவர்களிடையே இருந்த சின்னஞ் சிறார்கள்கூட நாடகீயமான திருட்டுத்தனத்துடன் என்னை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தார்கள், ’பிசாசே! ஓ பிசாசே!’ என்று பாடியவண்ணம். அந்தச் சிறார்களுக்கு கெட்ட எண்ணம் எதுவும் இருந்திருக்க முடியாது என்று தோன்றியது. ஏனென்றால் அவர்கள் தம் விரலால் என்னைக் குத்திவிட்டு, உடனே சிரித்தார்கள்..

இருந்தாலும் நான் நிதானமாகவே நடந்துகொள்ளவேண்டும் என்று எண்ணினேன். ஆகவே., கையில் சில ததகவல்களுடன் கோதாவில் நேரடியாக இறங்கினேன். ’எத்தனை பூக்களோட பேரு தெரியும், உங்களுக்கு? பூக்களென்றால், காட்டுப் பூக்கள். என் சனங்களுக்கு ரெண்டுதான் தெரியும். உண்மை என்னவோ, இப்போது அப்படித்தான் சொல்றாங்க.. ஏழையோ பணக்காரரோ, அவுங்களுக்கு இரண்டு பூக்களோட பேருதான் தெரியும்: ரோஜாவும் ஊதாப்பூவும்.’

’டெய்சிப் பூ’ என்றான் ஒரு சிறுவன் உடனடியாக.

’களை’ என்றான் இன்னொருவன். கஞ்சாவை அப்படித்தான் சொல்வார்கள். அதுவும் ஒரு பூ என்றுதான் நினைத்தேன்.

ஆனால் அந்த ஜோக் மற்ற அனைவருக்கும் புரிந்திருந்தது.

’நாகப் பூ’ என்றாள் இளம்பச்சை நிற உடைக்குக் குறுக்காக கரும்பச்சை நிறத்தில் ஒரு பட்டையை அணிந்திருந்த சாரணச் சிறுமி. காட்டுப் பூக்கள் களஞ்சியம் என்ற நூலையும் தூக்கிப் பிடித்திருந்தாள்.

’உனக்கு எத்தனை தெரியும், குண்டம்மா?’ என்று நட்புணர்வுடன் கேட்டான் ஒரு சிறுவன். நான் குண்டாக இருப்பதையோ அம்மாவாக இருப்பதையோ அவன் எதிர்க்கவில்லை. எனவே, என்னுடைய முழுக் கவனத்தையும் அவன்பால் திருப்பினேன்.

’மகனே’ என்றேன். ’இந்த விஷயத்துல என் சனத்தை விட எனக்கு நிறையவே தெரியும். மஞ்சள் நிறத்திலேயே எனக்கு பதினாறு வகைப் பூக்கள் தெரியும், எல்லா பூக்களையும் நானே பாத்திருக்கேன். என் கண்ணாலே பாத்திருக்கேன்.’

’பருவநிலை நல்லா இருந்தா, பலகைப் பாதையிலிருந்து சீனாவையே பாக்க முடியும்’ என்றான் ஒரு சிறுவன்..

நாடுகளைவிட மலர்களைத்தான் நான் அதிகமாகத் தெரிந்து வைத்திருந்தேன். இப்போதெல்லாம் பெரும்பாலான இளைஞர்கள் அநேக நாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறார்கள்.

’நான் எங்கேயும் போனதில்லை.’

‘நானும் போனதில்ல’ என்று ஏறக்குறைய பதினேழு சிறுவர்கள் திருப்பிச் சொன்னார்கள்.

‘என்ன போறத்துக்கு விடமாட்டாங்க’ என்றாள் ஒரு சின்னஞ்சிறு பெண். ‘அங்கெல்லாம் போதை மருந்து சாப்பிடுறவங்க குடிச்சுட்டு கிடப்பாங்களாம்.’

’நான்! நான்!’ என்று ஒரு உயரமான கருப்பின இளைஞன் கூவினான். அவன் மிகவும் அழகானவன்; நேர்த்தியாக உடுத்திருந்தான். ’நான் ஒரு ஆப்பிரிக்கன். என் தந்தை மேடான சமவெளிப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். நான் எல்லா இடங்களுக்கும் சென்றிருக்கிறேன். இயந்திரவியல் பயில்வதற்காக மாஸ்கோவில் ஆறு மாதம் தங்கியிருந்தேன். ஃப்ரென்ச் மொழியைக் கற்பதற்காக ஃப்ரான்சில் வாழ்ந்தேன். அதன் விநோதமான மறுமலர்ச்சியையும் அந்த மக்களின் இனிய பண்பையும் அவதானித்துக்கொண்டு இத்தாலியில் வாழ்ந்தேன்,. பொதுச்சட்டத்தையும் நகர்ப்புற சீரழிவையும் கற்றாய்ந்தபடி இங்கிலாந்திலும் தங்கியிருந்தேன். எம் உணர்வெழுச்சியைப் புரிந்துகொள்வதற்காக, க்யூபாவில் நடந்த கருப்பின வாலிபர்கள் மாநாட்டுக்கும் போயிருந்தேன்,. இப்போது நான் இந்த நாட்டில் வசிக்கிறேன். பொறியிலாளராகும் நோக்கத்துடன் இங்கே வந்திருக்கிறேன். அதற்கப்புறம் ஒரு நார்வேஜிய பாய்மரக் கப்பலில் நன்னம்பிக்கை முனையைச் சுற்றிப் பயணம் செய்து, என் மக்களிடம் திரும்பிப் போய்விடுவேன். வழியில் நான் பாய்மரக் கப்பலை செலுத்தும் கலையைக் கற்றுக்கொள்வேன். நிலப்பரப்புகளால் சூழப்பட்ட என் பண்டைய நாட்டில் உருவாகிக் கொண்டிருக்கும் புதிய சமுதாயத்தின் எந்திரம் எக்காரணத்திற்காகவோ வேலை செய்யாமல் நின்றுவிட்டால, அந்த பயிற்சி பயனுடையதாக இருக்கும்.’

அதற்கப்புறம் வெகுநேரத்துக்கு அங்கே அசாதாரணமான அமைதி நிலவியது. பின்னர் கருப்பு நிறத்தில் உடையும் வெள்ளை நிறத்தில் பின்னற்பட்டியும் அணிந்திருந்த ஒரு வயதான சீமாட்டி அவளைப் போலவே உடையணிந்திருந்த இன்னொரு சீமாட்டியிடம் ’ஒரே ஒருத்தனுக்காவது தலையில் மீன் சாறுக்கு பதிலாக மூளை இருப்பது சந்தோஷமான செய்தி’ என்றாள். ’ஆமென்!’ என்று ஆமோதித்தனர் ஒரு சிலர்.

’ஏன் அம்மிணி, உன் வீட்டில் இப்போது இருக்கிறாளே, திருமதி லுட்டி? அவளை நீ போய்ப் பார்க்கலாமே?’ சாரணச் சிறுமி இப்படிக் கேட்டாள்.

’உன்னைப் பார்த்தவுடனே அவ ஒரே பரவசமாயிடுவா, இல்லையா?’ என்று ஏளனச்சிரிப்புடன் எடக்காக எவனோ சொன்னான்

’திருமதி லுட்டிக்கு இருதயப் படபடப்பு நோய். அவ புருஷன் அவளுக்குக் கொடுத்தது.’

‘அது ஒண்ணுதானா? அவ புருஷன் சாதாரணமாகவே நெறைய அன்பளிப்பு கொடுப்பான்.’

’நான் உன்ன அழச்சிட்டுப் போறேன்’ என்றாள் சாரணச் சிறுமி. ’என் பெயர் சிந்தியா. நான் இருப்பது சேனை எண் 355, ப்ரூக்லின்.’

’நான் அதற்குத் தகுந்தமாதிரி உடை அணிந்திருக்கவில்லையே’ என்றேன், மொத்தையான என் முழங்கால்களைப் பார்த்துக்கொ்ண்டே.

’நீ இந்த மாதிரி ஒடுறவ பேரும் நம்பரும் அச்சடிச்சிருக்காத சட்டையைப் போட்டுக்கக் கூடாது. அது உள்பனியன் மாதிரி இருக்கு’ என்றாள் சிந்தியா.

சிந்தியா! இவளை அங்கே கூட்டிப் போகாதே’ என்றான் ஒரு பையன், தோரணையாக. ’இவ கொஞ்சம் மெண்டல் போல. அழச்சிட்டுப் போகாதே. கேட்டியா?’

அவள் மென்மையாகச் சொன்னாள்: ’லாரன்ஸ், நீ இன்னொரு வாட்டி நான் என்ன செய்யணும், செய்யக்கூடாதுன்னு சொன்னே, உன்னை இந்த விளக்குக் கம்பத்தைச் சுத்தி முடிஞ்சுடுவேன்.’

‘என்னைப் பார்த்து, ’எழுந்திரு’ என்றாள், அதிகாரம் தொனிக்க.

இப்படித்தான் நான் என் குழந்தைப் பருவத்தைக் கழித்த வீட்டின் நடைவழிக்குள் இட்டுச் செல்லப்பட்டேன்.

என் கண்ணில் பட்ட முதல் கதவின்மீது இப்பவும் தங்க இலைகள் பொதியப்பட்டிருந்ததன. 1-ஏ.

’அங்கேதான் எங்கள் கட்டிடத்தின் துப்புரவு ஊழியர் வசித்து வந்தார்’ என்றேன். ’அவர் ஒரு நீக்ரோ.’

’அது எப்படி?’ சிந்தியாவின் முகம் வியப்பால் விரிந்தது. ‘அது எப்படி உங்க துப்புரவுப் ஊழியர் கருப்பரா இருந்தாரு?’

’ஓ சிந்தியா’ என்றேன். அப்புறம் நேரெதிரே இருந்த கதவை நோக்கித் திரும்பினேன். முதல் மாடி, முன்பக்கம், 1-பி என்று நினைவு. படு, படு குண்டாயிருந்த திருமதி கோரெடிட்ஸ்கி இங்கே, இப்பொழுதே, என் மனக்கண்முன் தோன்றினாள். அவளுடைய எல்லா குழந்தைகளும் பிரசவத்தின்போதே மரித்து விட்டன. பிறந்தன, வரிசையாக: ஒண்ணு, ரெண்டு, மூணு. பிறந்தவுடனேயே மரணம்.. இப்படி ஐந்து குழந்தைகள் பிறந்து இறந்ததற்கப்புறம் திருவாளர் கோரெடிட்ஸ்ல்கி, ’என்னால உனக்கு துரதிர்ஷ்டம்தான், டெஸ்ஸி’ என்று சொல்லிவிட்டு எங்கேயோ போய்விட்டார். அதற்கப்புறம் ஏழு ஆண்டுகளுக்கு வாரம்தோறும் பதினைந்து டாலர் அனுப்பினார். பின்னர் அவரிடமிருந்து எந்தச் செய்தியும் இல்லை.

’எனக்கு அவளைத் தெரியும், பாவம், அவள்’ என்றாள் சிந்தியா.

’நகராட்சி ஆளுங்க போன வருஷத்துக்கு முந்தின வருஷம், கோடைக்காலத்துல அவளைத் தேடிண்டு வந்தாங்க. வீசின நாத்தத்துலேருந்தே அவ நிலைமை அவங்களுக்கு தெரிஞ்சு போச்சு. ஒரு கித்தான் துணியிலெ அவளை சுருட்டி எடுத்துட்டு போனாங்க. வாசக்கதவு வழியா அவளை எடுத்துப் போக முடியல. அவளோட ஒரு பக்கத்துல கதவு கொஞ்சம் ராவிடிச்சு. ரோனால்ட் அங்கிள் அவங்களுக்கு உதவியா இருந்தாரு. அவருக்கே தாங்க முடியல.’

‘ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியா? அப்ப அவ அதுவரைக்கும் இங்கதான் இருந்திருக்கா! அவளுக்குப பயமா இருந்திருக்குமே?’

’எங்களுக்கும்தான்’ என்றாள் சிந்தியா. ’வெள்ளைக்காரங்களுக்குத்தான் எல்லாமா?’

’இங்கே மேலே யார் இருந்தாங்க, 2B-ல?’ என்று கேட்டாள். ’இப்போ என்னுடைய நெருங்கிய சிநேகிதி, நான்சி ரோஸலிண்ட் இருக்கா. அவளுக்கு ரெண்டு அண்ணன்.. அவளோட அக்காவுக்கு கல்யாணம் ஆகி ஒரு குழந்தையும் பிறந்திருக்கு. குழந்தைக்கு சேப்புத் தோலு, அவங்கம்மா மாதிரி இல்ல. இப்போ எல்லா கலரும் எங்களுக்குள்ளயே வந்துடுச்சு.’

’உன் நெருங்கிய தோழியா? வேடிக்கையாயிருக்கே!. ஏன்னா அங்கே இருந்தது என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட். அந்த அபார்மெண்டிலேயே இருந்தா. ஜோஆனா ரோசென்-னு பேரு.’

’அவளுக்கு என்ன ஆச்சு?’ சிந்தியா கேட்டாள். ’அவளுக்கும் ஓடறதுக்குன்னு தனியா சட்டை கிடைச்சுதா?’

’இதப் பாரு, சிந்தியா. உனக்கு நிஜமாவே தெரியணும்னா சொல்றேன். அவ மார்வின் ஸ்டேர்ஸ்-னு ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டா.’

’அது யாரு?’

நான் அவருடைய சாதனைகளை நினைவுகூர்ந்தேன். ’அவரு ஜோமார் ப்ளாஸ்டிக்ஸ்-ங்கற ஒரு பெரிய கார்ப்பரேஷனுக்கு தலைவர். இந்த கார்ப்பரேஷனுக்கு ஒரு எஃகு தயாரிக்கும் கம்பெனி, வானொலி நிலையம், ஸீராக்ஸ் போல, இருபத்தைந்து பக்கத்தை ஒரே சமயத்துல ஒளிநகலெடுக்கும் புது இயந்திரம், இதெல்லாம் சொந்தம், இது தவிர, இந்த கார்ப்பொரேஷனுக்கு சொந்தமா ஒரு ஃபவுண்டேஷன் இருக்கு. அதுதான் இயற்கை பராமரிப்பு தொடர்பான ஆய்வுகளுக்கென்று நிறுவப்பட்ட ஜோமார் நிதி. முதலாளித்துவம் அப்படியும் இருக்கும்’ என்றேன், அரசியல் ரீதியாகவும் உருப்படியாக ஏதாவது சொல்லி வைப்போமென்று.

’உனக்கு இதெல்லாம் எப்படித் தெரியும்? அவங்க வீட்டுக்கு அடிக்கடி போவியா?’

’இல்லை. அவங்களைப் பத்தின எல்லா தகவலையும் போன வாரம்தான் செய்திப் பத்திரிகையின் நிதி விவகாரங்கள் பக்கத்துல படிச்சேன். .என்னை ரொம்பவே யோசிக்க வெச்சுது. அது வேற மாதிரி வாழ்க்கை. அவ்வளவுதான் சொல்லமுடியும்.’

’’அந்தந்த சனத்துக்கு அந்தந்த ஆரக்கால்’ என்றாள் சிந்தியா.

தண்ணென்று குளிர்ச்சியாய் இருந்த சலவைக்கல் படிகளில் உட்கார்ந்துகொண்டு ஜோஆனுடைய ஒன்றுவிட்ட சகோதரன் சிக்கியை நினைத்துக்கொண்டேன். சிக்கி எங்களையெல்லாம் விட வயதில் பெரியவன். அவன் எங்களுக்காக ஒரு கவிதை எழுதினான். நாங்களெல்லாம் அழகான மலர்கள்; எங்களுடைய கால்கள் மலர் இதழ்களைப் போன்றவை; நாங்கள் எத்தனை முறை முடியாது என்று சொன்னாலும், இயற்கை எங்கள் கால்களை வலியத் திறக்கவைக்கும் என்று அவனுடைய கவிதை எங்களுக்கு அறிவுறுத்தியது.

பின்னர் என் மனத்தில் பல்வேறு அகவய எண்ணங்கள் தோன்றின. அவை ஒரு சிறுமியுடன் பகிர்ந்துகொள்ள முடியாத எண்ணங்கள்; சட்டென முகத்தில் வெறுமையையோ சோகத்தையோ தோன்றச் செய்யும் எண்ணங்கள்.

’இப்போ உனக்கு ஆர்வமில்லே’ என்றாள் சிந்தியா. ’நீ இப்பொ ஓண்ணும் சொல்லப் போறதில்லே. இங்கே 2ஏ-ல யாரு இருந்தாங்க? இப்ப ரெண்டு ஆம்பிளைங்க இருக்காங்க. பொம்பிளைங்க வராங்க, போறாங்க. எங்கம்மா சொல்லுது. இது அபாயத்துக்கு அறிகுறி. ஒதுங்கியே இரு, என் மகளே, ஒதுங்கியிரு.’

’எனக்கு நினைவில்லை, சிந்தியா. உண்மையாகவே நினைவில்லை.’

’:நினைவுக்கு கொண்டுவரணும் நீ. பின்னே எதுக்காக இங்க வந்திருக்கே?’

அதற்கப்புறம் நினைவுக்குக் கொண்டுவர நான் முயற்சி செய்தேன். 2ஏ. 2ஏ. அங்கே இருந்தது அந்த இரட்டையர்களா? நினைவுக்கு கொண்டுவருவதுதான் கடந்த காலத்தின் இருப்பையே தீர்மானிக்கப் போகிறது என்கிற மாதிரி ஒரு கடப்பாட்டை உணர்ந்தேன். ஆனால் இது அப்படியில்லை.

’சிந்தியா’ என்றேன். ’இதுக்கு மேலே போறதுல எனக்கு இஷ்டமில்லை. அதையெல்லாம் பற்றி நினைக்கவே பிடிக்கல.’

’வா, வா’ என்றாள் சிந்தியா, என் சல்லடத்தைப் பற்றி இழுத்துக்கொண்டே. ’உன் பழைய வீட்டில் வசிக்கும் திருமதி லுட்டியைப் பார்க்கவேண்டாமா? பார்த்தால் ஜாலியாக இருக்கும், இல்லையா?’

’இல்லை, சிந்தியா. எனக்கு திருமதி லுட்டியைச் சந்திக்க வேண்டாம்.’

’நீ கீழே நிக்கற பையன்களைக் கண்டுக்காதே. அவளுக்கு ஒன்னை பிடிச்சுப் போகும். ஏன்னா அவ ரொம்ப அன்பானவ. அவளுக்கு வெள்ளக்காரங்களை பெரும்பாலும் பிடிக்காது. ஆனா உன்னைப் பிடிக்கும்னு நினைக்கிறேன்.’

’வேண்டாம், சிந்தியா. அதில்ல பிரச்சினை. என் அப்பாவும் அம்மாவும் இருந்த வீட்டை இப்ப பாக்க வேணாம்னு தோணுது.’

அவளிடம் என்ன சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. ’ஏன்னா, எங்கம்மா இறந்துட்டாங்க’ என்றேன். அது பொய். என் அம்மா ”ஜூடியாவின் குழந்தைகள்” இல்லத்தின் ஒரு அறையில் என் அப்பாவுடன் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறாள். தன் சோஷலிஸ்ட் இதயத்தின் மேல் ஒரு கையை வைத்துக்கொண்டு காலைதோறும் சிற்றுண்டிக்கப்புறம் தினசரி பத்திரிகையைப் படிக்கிறாள். பிறகு வருத்தத்துடன் என் அப்பாவிடம் சொல்வாள்: ’தினமும் இதே கதைதான். சாவுக்கு மேல் சாவு. கொலை விழுந்து சாவு.’

’எங்கம்மா இறந்துட்டாங்க, சிந்தியா. என்னால அங்க போகமுடியாது.’

என் கண்களை ஊடுருவிப் பார்த்துக்கொண்டே, ’ஓ…ஓ…பாவம் நீ’ என்றாள் சிந்தியா,. ’ஓ, எங்கம்மா செத்துப் போயிட்டாங்கன்னா, நான் என்ன செய்வேன்னே தெரியாது. அப்ப எனக்கு உன்னை மாதிரி வயசாயிருந்தாக்கூட, நான் தற்கொலைதான் செஞ்சுக்குவேன்.’ அவளுடைய கண்களில் நீர் நிறைந்து கன்னங்களில் வழிந்தது. ’எங்கம்மா இறந்துபோனா நான் என்ன பண்ணுவேன்? அவதான் என்னைக் காப்பாத்தறவ. போதை மருந்து விக்கிறவங்க என்கிட்ட வராத பாத்துக்கறா. என்னை இறுகக் கட்டிப் பிடிச்சுக்கறா. ரட்ஃபோர்ட் அங்கிள் என்னைத் திரும்ப அழைச்சுட்டுப் போக வந்தா, அவ என்னை மரப்பெட்டிக்குள்ள ஒளிச்சு வைப்பா. எங்கம்மாவுக்கு சாவே கிடையாது.’

’சிந்தியா—என் கண்ணே.—உங்கம்மா சாகப் போறதில்ல. அவளுக்கு இளம் வயசுதான்.’ என் கையை நீட்டி ஆறுதலாய் அவளை அணைத்துக் கொண்டேன். ’நீ என்னுடன் வந்து இருக்கலாம். எனக்கு இரண்டு பிள்ளைகள். அவங்களும் வளந்துட்டாங்க. பெண் இல்லாத குறை தெரியுது இப்போ.’

’என்னது? நீ இப்ப என்ன சொல்றே, உன்னோடயும் உன் பிள்ளைகளோடயும் வந்து இருக்கணுமா?’ அவள் தன்னை வேகமாக விலக்கிக்கொண்டு மாடிப்படியை நோக்கி ஓடினாள்.

’ஏய், வெள்ளைக்கார அம்மணி! என்கிட்டயே வராதே. அந்த வெள்ளைக்காரப் பசங்களைப் பத்தி எனக்குத் தெரியும். அவங்க முட்டித் தள்ளி என் கருப்பு யோனியை அடையத்தான் பாப்பாங்க. அதப் பத்தி எங்கம்மா சொல்லியிருக்கா. உன் வெள்ளைக்காரப் பிசாசுப் பசங்களை உன்ன மாதிரி பிசாசு கூடவே வெச்சுக்கோ. என்னை சும்மா இருக்க விடு, கிழட்டு நாயே. யாராவது உதவிக்கு வாங்களேன்!’ அவள் அலறத் தொடங்கினாள். ’கேக்கலையா? யாராவது வாங்க. இவ என்னை எங்கியோ தூக்கிட்டுப் போகப் போறா.’

உடல் நடுங்க, அவள் சுவரோடு ஒட்டிக்கொண்டாள். அவளுக்கு என்னிடமிருந்த பயம் என்னை அச்சுறுத்தியது. என் கண்ணே, நான் உனக்கு தீங்கு செய்யமாட்டேன் என்று சொல்ல வாய் வரவில்லை. அவளுக்கு உதவி செய்ய ஓடி வருபவர்களின் சந்தடி கேட்டது. ’வரோம், வரோம், தைரியமா இரு, இதோ வந்துட்டோம்’ என்று வாட்டசாட்டமான இளைஞர்கள் கத்துவதைக் கேட்டேன். அவளுடைய அச்சத்தைக் கடந்து ஓடி மாடிப்படியை அடைந்தேன். இரண்டிரண்டு படியாகத் தாவி ஏறி என்னுடைய பழைய வீட்டின் கதவுக்கு முன்னால் நின்றேன். வீட்டுச் சொந்தக்காரியைப் போல சத்தமாகவும் கொடூரமாகவும் கதவைத் தட்டினேன்.

’மம்மா வீட்டுல இல்லை’ என்றது ஒரு குழந்தையின் குரல்.

’இல்லை, இல்லை’ என்றேன். ’இது நான்தான், ஒரு பொம்பளை. என்னை யார் யாரோ விரட்டிண்டு வராங்க. என்னை உள்ளே வர விடு.’

’மம்மா வீட்டுல இல்ல. நான் யாருக்காகவும் கதவைத் திறக்க முடியாது.’

’நான்தான்!’ பயத்தில் வீறிட்டேன். ’அம்மா! அம்மா! என்னை உள்ளே விடுங்கள்!’

கதவு திறந்தது. நான் மதிப்பிட இயலாத வயதுடைய ஒற்றைநாடிப் பெண்மணி என்னை ஏறிட்டுப் பார்த்தாள். ’உள்ளே வா. கதவை இறுகச் சாத்து’ என்றாள். முழங்கைக்கு மேலே என் கையைக் கிள்ளுவது போல் இறுகப் பிடித்துக்கொண்டாள். பிறகு அவளே கதவுக்கு தாழ்ப்பாளைப் போட்டாள்.

’உனக்கு பின்னாடி ஓடிவராங்களே, அந்த பேமானிங்க. அவங்களைப் பாத்தா நான் பொல்லாதவளாயிடுவேன். டோனால்ட், இந்த வெள்ளைக்கார அம்மிணியை ஒளிச்சு வை. உனக்குத்தான் உயரமான கட்டிலாச்சே. அதுக்கு கீழெ தள்ளு.’

’ஓ, பரவால்ல. நான் நல்லாத்தான் இருக்கேன். இப்போ ஒண்ணும் தொந்தரவில்லை’ என்றேன். அந்த வீட்டில் பாதுகாப்பாகவும் என் வீட்டிலேயே இருப்பது போலவும் உணர்ந்தேன்.

’என் வீட்டுல இருக்கற வரைக்கும் நான் சொல்றபடிதான் நீ கேக்கணும்’ என்றாள் அவள். ’ஏதாவது பேசினே, உன்னை வெளிலே கெடாசிடுவேன். ஜாக்கிரதை.’

இப்படியாக, ஒரு சிறுவனின் மூத்திர நாற்றமடிக்கும் படுக்கையின் கீழ் குந்திக்கொண்டேன். அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது; பதவிசாக, அரைமனதுடன் தட்டுவது போலிருந்தது.

’எங்கம்மா என்னை திறக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்க.’

’டோனால்ட்!’ என்று யாரோ அழைத்தார்கள். ’டோனால்ட்!’

’முடியாது’ என்றான் அவன். ’முடியவே முடியாது. எங்கம்மா என்னைத் தொலச்சிடுவா. உனக்கு அவளைத் தெரியும். இன்னிக்கு காலையிலே ஏற்கெனவே ஒருதரம் என் குண்டியைக் கிழிச்சுட்டா. நான் திறக்கமாட்டேன்.’

திருமதி லுட்டி, டோனால்ட் மற்றும் ஒரே வயது போல் தோற்றமளித்த மூன்று சின்னஞ்சிறிய பெண் குழந்தைகளுடன் அங்கே மூன்று வாரங்கள் தங்கினேன். திருமதி லுட்டியிடம் ஐரிஷ் இரட்டையர்களைப் பற்றி ஜோக் அடித்தேன். ’நாங்க ஐரிஷ்காரங்க இல்லையே’ என்றாள் அவள்.

கிட்டத்தட்ட நாள்தோறும் காலை 6:45 மணிக்கு அந்தக் குழந்தைகள் எங்களை எழுப்பிவிடும். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு பாட்டில் கொடுத்துவிட்டு நாங்கள் திரும்பவும் எட்டு மணி வரை தூங்குவோம். நான் காபி போடுவேன். அவள் குழந்தைகளின் பீத்துணியை மாற்றுவாள். அப்புறம் சிறிது நேரத்துக்கு அங்கே பயங்கரமாக நாற்றமடிக்கும். வழக்கமாக அந்த நேரத்தில் நான் சொல்வேன்: ’இங்க பாரு, உனக்கு ரொம்ப நன்றி. இப்ப நான் கிளம்பணும்னு நினைக்கிறேன். சரி, கிளம்பறேன்.’ வழக்கமாக அவள் இவ்வாறு பதிலளிப்பாள்: இன்னொரு தபா யோசிச்சுப் பாரு. நீ கிளம்பமாட்டேன்னுதான் நினைக்கிறேன்.’ அல்லது, மோசமான மூடில் இருந்தால், ’போ. உனக்கு போகணும்னா இப்பவே கிளம்பு. வெள்ளைக்காரப் பொம்பளையோட நாத்தத்தை ஒரு குதிரையை சாகடிக்கக் கூடிய அளவுக்கு சுவாசிச்சுட்டேன்னு நினைக்கிறேன். போயேன்’ என்பாள்.

நான் கதவருகே போவேன். அப்போது பேச்சுக் குரல்கள் கேட்கும். நான் மிகவும் பயந்தவளாக மாறியிருந்தேன் என்று சொல்வதற்கு வெட்கப்படுகிறேன். பூமியின் பரந்த நிலப்பரப்பில் வாழும் மனிதகுலத்தை நான் நேசித்தாலும், உள்ளூர் கிலிகளால் தாக்கப்பட்டேன்.

நான் அந்த இடத்தை விட்டுப் போவேனா, மாட்டேனா என்ற பிரச்சினைக்கு மிக அருகே ஒரு உணர்வுரீதியான உண்மை இருந்தது. அந்த வீடு, உள்ளபடியே என் வீடுதான். அங்கேதான் நான் வெகுநாட்களுக்குமுன் என் குடும்பத்துடன் வாழ்ந்திருந்தேன். அந்தக் குளியலறைத் தரையில் ஒரு வனையோட்டை என் கையாலேயே உடைத்திருந்தேன், என் அண்ணன் சார்லஸின் கால்விரல்மீது ஒரு சுத்தியலைப் போட்டு. அப்போது அவன் ஏதோ கனவுலகில் மிதந்துகொண்டே முகச்சவரம் செய்துகொண்டிருந்தான். அவனுடைய ஆண்குறி அவனுடைய உட்சல்லடத்திற்குள் பாதி தூக்கிக்கொண்டிருந்தது. பிரமிப்பும் அறிதலும் என்னை கைக்கொண்டதும் அங்கேதான். சமையலறை முன்பிருந்தபடியேதான் இருந்தது. அங்கிருந்த மேஜை எங்கள் வர்க்கத்துக்குப் பொதுவான, எனாமல் பூசப்பட்ட மேஜை. சுத்தம் செய்யத் தோதான மேஜை. சமையலறைக் கழுவுதொட்டிக்கு வர இயலாத வயதான கரப்பான்பூச்சிகளுக்கு வசதியாக கீழே மரத்தாலான முக்குகள் கொண்ட மேஜை. (ஆனால் அந்த வீட்டிலிருந்தது நாங்கள் பயன்படுத்திய அதே மேஜை அல்ல. ஏனெனில், ஆங்காங்கே சில்லுகள் விட்டுப்போயிருந்த அந்த மேஜையை நான் உரிமைப் பொருளாக பெற்றிருந்தேன்,)

வரவேற்பறை எங்களுடையதைப் போலவே இருந்தது. ஆனால், நாங்கள் இருந்தபோது இவ்வளவு பிளாஸ்டிக் சாமான்கள் கிடையாது. அன்றைய உலகத்தில் ப்ளாஸ்டிக் பொருட்கள் குறைவாக இருந்திருக்கலாம். கூடவே, படுக்கைகள், நாற்காலிகள் என்று எங்கு பார்த்தாலும் என் அம்மா அழகான திண்டுகளை வைத்திருப்பார். . இரவில் கண்விழித்துப் பூவேலை செய்வதும், பூக்கள் அச்சிட்ட பருத்தித் துணிப்பட்டைகளை சாதாரண நீலம் அல்லது வெள்ளை மஸ்லினுக்கு குறுக்காக மிகவும் நுணுக்கமான வடிவமைப்புகளில் தைப்பதும் அவர் தன் கலைத்திறனை வெளிப்படுத்திய வழிகளில் சில. குவியலாகவும் கந்தலாகவும் வாழ்ந்து மடியும் துணிகளை வழமையாகப் பயன்படுத்தும் இவ்வழிகளின் மூலம் பெண்கள் சொல்ல நினைப்பது, ’இது என்னுடைய இடம்’ என்பதுதான்.

’அப்படியா?’ என்றாள் திருமதி லுட்டி.

’ஆம்’ என்றேன். ’ஆண்களுக்கு அந்த வடிகால் கிடையாது. அதனால்தான் அவங்க இந்த அலைச்சல் அலையறாங்க.’

’நீட்டிப் படுத்துக்கற அளவுக்கு மட்டையாகுற வரைக்கும்’ என்றாள் அவள்.

’ஆமாம்’ என்றேன். ’உலகத்தில இது பெரிய அளவுல நடக்குது. முதல்ல ஒண்ணை உருவாக்குவாங்க. அதுக்கப்புறம் அதைக் கொன்னுடுவாங்க. அப்புறம் அது எவ்வளவு சுவாரசியமா இருந்துச்சுங்கறதைப் பத்தி ஒரு புத்தகம் எழுதுவாங்க.’

’நீ சொல்றதுல ஏதோ இருக்கு’ என்றாள் அவள். சிலசமயம் அவள் இப்படியும் சொல்வாள்: ’பெண்ணே, உனக்கு ஒண்ணுமே தெரியாது.’

நாங்கள் அடிக்கடி ஜன்னலருகே அமர்ந்து வெளியேயும் கீழேயும் பார்த்துக்கொண்டிருப்போம். அந்த ஜன்னல் விளிம்பில் காற்று சிறுசிறு முடிச்சுகளாகப் பெருகியது. எரியும் பிற்பகல் அந்தத் தெருமுனைத் திருப்பத்துக்கு அப்பாலும் தெருவின் அடுத்த பகுதியிலும் காத்திருந்தது.

’நீ அடிக்கடி ஆம்பிளைங்கன்னு சொல்ற’ என்றாள் அவள். ’அது ஆம்பிளைங்கதானா?’ என்று கேட்டாள். ’ஆண் என்று நாம் சொல்வதுதானா?’

எங்களுக்குக் கீழே நான்கு தளங்களைத் தாண்டி, தெருவாசலில் பத்து, பன்னிரண்டு பேர் நின்றுகொண்டும் சாய்ந்துகொண்டும் இருந்தார்கள். அவர்களைச் சுற்றி எங்கும் பேரழிவு. ’ஒரு நிமிஷம்’ என்றேன். பேரழிவை நான் ஓடிவந்த வழியில் பார்த்திருந்தேன். பேரழிவின் சிறு கூழாங்கற்கள் ஓட்டப்பயிற்சிக்காக நான் அணிந்திருந்த ஜோடுகளுக்குள் புகுந்திருந்தன; பேரழிவின் புழுதி என் கண்களில் படிந்திருந்தது. என்னுடைய நேசத்துக்குரியதும் நான் இப்போது ஓடிக்கொண்டிருக்கும் வெளியுமான நியூயார்க் மாநகரத்துக்கு இது பெருத்த அவமானம் என்று ஒரு பிரஜையின் விநயமான கோபத்துடன் எண்ணினேன்:

ஆனால் இப்போது, என் வீட்டின் அதிகாரத்துக்கே உரிய உயரத்திலிருந்து, அப்பேரழிவைத் தெளிவாக பார்க்க முடிந்தது. எந்த வசிப்பிடத்தில் என்னுடைய நெடுநாள் நண்பன் ஜாக் தன் இருள் படர்ந்த ஆண்மையை எட்டினானோ, அந்தக் கட்டிடம் முதலில் தீ வைக்கப்பட்டு, பின் தகர்க்கப்பட்டு (தகர்த்தல் என்பது படுக்கையறைகளையும் சமையலறைகளையும் பிளக்கக்கூடிய மிகப் பெரிய எஃக்கு குண்டின் ஊசலாட்டம்), தரைமட்டமாக்கப்பட்டிருந்தது. இந்த வேலையின் விளைவாக, பல நூறு மீட்டர் அகலம், நூறு மீட்டர் நீளம் கொண்ட திறந்த வெளியை எங்களால் பார்க்கமுடிந்தது. பைத்தியக்கார எட்டியின் வீடு இன்னும் நிலைத்திருந்தது. அந்த வீட்டின் கதவு எண் 1510 தீய்ந்து போய், அதன் கண்ணாடி இல்லாத ஜன்னல்களின் சட்டங்கள் கரியாகியிருந்தன. கூரையைத் தாங்கி நின்ற விட்டங்களுக்குத்தான் எத்தனை பிடிவாதம்! சில நபர்களோ குடும்பங்களோ இன்னும் கீழ் தளங்களில் குடியிருந்தார்கள். இடையே இருந்த காலி மனைகளில் இரண்டு சோஃபாக்கள் தங்கள் ஊதிப்போன முகங்கள் மண்ணில் பதியுமாறு குப்புறக் கிடந்தன. அந்த சோஃபாக்களின் கம்பிச் சுருள்கள் வானத்தை நோக்கி நீட்டிக்கொண்டிருந்தன. போர்க்காலத்தில் நடந்ததைப் போலவே ஐந்தாறு அகல் மரங்கள் அதற்குள் தங்களுக்கான கால் அங்குலப் பரப்புடைய மண்ணைத் தேடியடைந்து அந்த உயிரற்ற புறக்கடைகளின் மீது வாழ்க்கையின் தாக்குதலைத் துவங்கியிருந்தன. .இரவு வேளையில் ஆக்ரோஷமான நியூயார்க் நாய்கள், தெருவில் திரியும் பூனைகள், ராட்சச எலிகள் போன்ற பல்வேறு விலங்குகள் அங்கே ஓலமும் ஊளையுமிட்டுக்கொண்டு திரிந்தன என்பது எனக்குத் தெரியும். கரடி மலைப் பூங்கா என்னும் புகழ்பெற்ற வனப்பிரதேசத்தில் இருந்தாற்போல் வெளியே காலெடுத்து வைப்பதற்கே பயமாக இருந்தது.

’யாராவது அந்த இடத்தைச் சரி செய்யணும்’ என்றேன்.

திருமதி லுட்டி சொன்னாள்: ’அதை யாரு செய்வாங்கன்னு நினைக்கிறே, திருமதி கென்னடியா?’

டோனால்ட் முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டான். ’நான் பெரியவனானப்புறம் அதைத்தான் செய்யப் போறேன்’ என்றான். ’துப்புரவுத் தொழிலாளியைக் கூப்பிட்டு இதைக் காட்டப் போறேன். இங்க பாரு, தடியா, உடனே இந்த இடத்தை சுத்தம் பண்ணுன்னு சொல்லப் போறேன்.’ பின்னர் அவன் காலை ஓங்கித் தரையில் உதைத்தான்; கண்களில் கோபம் மின்னியது.

’இங்கே வாடா, பொடியா’ என்று அவனை அழைத்தாள் திருமதி லுட்டி. ஒரே நேரத்தில் அவன் தலையின் உச்சியில் முத்தமிட்டு அவனுடைய பின்புறத்தில் பலமாக ஒரு அடியும் கொடுத்தாள்.

இதனால் ஊக்கமடைந்த டோனால்ட் எங்களிருவரிடமும், ‘அங்கே பாருங்க. உம், நல்லாப் பாருங்க!’ என்றான். நாங்கள் ஏற்கெனவே பார்த்திருந்தாலும அவனை மகிழ்ச்சியுறச் செய்வதற்காக எங்கள் பார்வையைத் திரும்பவும் அத்திசையில் செலுத்தினோம். அங்கே ஒரு வீட்டு வாசற்படியிலும் அதைச் சுற்றியும் வளர்ந்த ஆண்களும் சிறுவர்களும் சோம்பியபடி சாய்ந்துகொண்டும், குதித்துக்கொண்டும், மாறி மாறி ஒற்றைக் காலில் நின்றுகொண்டும், தங்கள் காலுறைகளை நீக்கிவிட்டு கால்விரல்களை சொறிந்துகொண்டும், பேசிக்கொண்டும், குந்தி உட்கார்ந்து தலையைக் கவிழ்த்தபடி தூங்கிக்கொண்டும் இருந்தனர்.

டோனால்ட் சீறினான்: ’அவங்களைப் பாருங்க. :யாருக்கும் துளியாவது சுயமரியாதை கிடையாது. தலைமுடி ஆப்பிரிக்கன் பாணில இருந்தாலும் தாங்க கருப்பினங்கறது அவங்க மூளைல உறைக்கல.’

அவன் இன்னும் சிறிது இரக்க உணர்வுடன் இருக்கக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று எண்ணினேன். ’அவங்க அப்படி இருக்கறதுக்கு காரணங்கள் இருக்கு, டோனால்ட்’ என்றேன்.

’சரிங்கம்மா’ என்றான் டோனால்ட்.

’எப்படியோ போகட்டும். நீ ஏன் கீழே போய் மத்த பிள்ளைகளோட விளையாடறதில்ல? ஏன் எப்பப் பாத்தாலும் இங்கேயே இருக்கே?’

’நான் கீழே போய் விளையாடினா எங்கம்மவுக்குப் பிடிக்காது. அங்கே சில பேர் மோசமானவங்க. படுமோசமானவங்க. நான் போதை மருந்துக்கு அடிமையாயிடலாம். அவங்கள விட்டு விலகியே இருக்கணும் நான்.’

’நீ ஒரு முட்டாள், நிஜமாவே’ என்றாள் திருமதி லுட்டி.

’தன் வயதையொத்த பிள்ளைகளோட டோனால்ட் இன்னும் நிறைய நேரம் செலவழிக்கணும்னு நினைக்கிறேன்.’

’பள்ளிக்கூடத்துல அவங்களோடதான் இருக்கான். உனக்கு ஆட்சேபணை இல்லைன்னா, நீ அதைப் பத்தி கவலைப்படாம இரு.’

உண்மையில், திருமதி லுட்டியும் கீழிறங்கி தெருவுக்குப் போவதில்லை. டோனால்ட்தான் வீட்டுக்குத் தேவையானதை வாங்கி வருவான். குடும்ப நலத் துறை ஆய்வாளரை மட்டுமே அவள் உள்ளே வர அனுமதிப்பாள். எரிவாயு மீட்டரைப் பார்க்க மிட்டர்காரன் சமையலறக்குள் நுழைவான். நான் பின்னறையிலிருந்து அவனைப் பார்த்திருந்தேன். திருமதி தனக்குரிய காசோலையை தவறாமல் வாங்கி வந்தாள். அதை வங்கியில் காசாக மாற்றவும் செய்தாள். திரும்பி வந்தவுடன் குழந்தைகளைக் குளிப்பாட்டினாள். குழந்தைத் துணிகளை மாற்றினாள். துணி துவைத்தாள். இஸ்திரி போட்டாள். உணவு சமைத்துப் பறிமாறினாள். பின் அவளுக்குக் கிடைத்த அரைமணிநேர ஓய்வுக்காலங்களில் அந்த ஜன்னலருகே உட்கார்ந்தாள். அவள் எதற்கோ காத்துக்கொண்டிருந்தாள் என்று தெரிந்தது.

அவள் ஒரு குறிப்பிட்ட ஆண் தென்படுகிறானா என்று பார்த்துக்கொண்டு அவனுக்காக காத்திருந்தாள் என்று தோன்றியது. அக்கா-தங்கைகள் தங்களுக்குள் பாசத்துடன் பேசிக்கொள்வது போல அவளிடம் இதைப் பற்றி பேச விரும்பினேன். ஆனால் ’அந்த வீணாப் போனவனை மறந்துடு, அவன் ஒரு பன்னி’ என்று மனம்விட்டு அவளிடம் பேசுவதற்கு முன்னால் என்னைப் பற்றியே சில தெளிவான உண்மைகளை அவளிடம் சொல்ல வேண்டியதாயிற்று. என்னைப் பற்றி. என் பிள்ளைகளைப் பற்றி. தந்தைகள், கணவர்கள், வழிப்போக்கர்கள் மற்றும் மாலைநேரத் துணைகளைப் பற்றி. கூடவே, என் தந்தையும் தாயும் இந்த அறையில், இந்த பிற்பகல் நேர ஜன்னலுக்கருக, வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி.

உதாரணமாக, என் வாழ்க்கையின் ஆக மோசமான தருணங்களில் நான் எனக்கே ஒரு மிக எளிய சந்தோஷத்தை கொடுத்துக்கொண்டேன். காலைச் சிற்றுண்டியாக பாற்சாரக் கட்டியை உண்பதுதான் அது. சில தருணங்களில் மிக முக்கியமான பொருள்களையும் உணவுப் பண்டங்களையும் என் குழந்தைகளுக்கு தர இயலாமல் போனாலும், எனக்கு பாற்சாரக் கட்டி வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தேன்.

’பெண்ணே, உனக்கு ஒண்ணும் தெரியாது’ என்றாள் திருமதி லுட்டி.

அப்புறம், தன் அடிமுட்டாள்தனத்தின் காரணமாகவே வெகுளியாகவும் பைத்தியமாகவும் அப்பழுக்கற்றவளாகவும் இருக்கும் ஒரு பெண்ணிடம் பேசுவது போல, மென்மையாக என்னிடம் சிறிது நேரம் பேசினாள். நெருக்கடியான தருணங்களில் அனுபவிக்க அவளுக்கு இரு பிரத்யேக இன்பங்கள் இருந்தன. முதலாவது, ஆண்கள். ஆனால் அவர்கள் சீக்கிரமாகவே சீர்கெட்டுப் போனார்கள். வெள்ளைக்காரப் பெண்கள், தம் குறி சொக்கத் தங்கத்தால் ஆக்கப்பட்டது என்ற எண்ணத்தை ஆண்கள் மனத்தில் உருவாக்கி அவர்களிடையே ஆகச் சிறந்தவர்களையும் பாழாக்கியிருந்தார்கள். அவள் சுவைத்துப் பார்த்த இரண்டாவது இன்பம், மது. ’எனக்கு மது ரொம்பப் பிடிக்கும்’ என்றாள். ’உனக்கே உனக்காகவென்று ஏதாவது உன்னிடம் இருந்தாக வேண்டும்.’ அவள் மேலும் தொடர்ந்தாள்: ’ஆனால், ஒவ்வொரு இரவும் மது குடித்த மயக்கத்தில் உழலுவோமென்றால் நம் பிள்ளையை ஒரு நல்ல பையனாக வளர்க்க முடியாது.’

மீண்டும் ஆண்களைப் பற்றி பேசும்விதமாக அவளிடம் சொன்னேன். ‘வெள்ளையோ, கருப்போ, ஆண்கள் தாங்கள் ஏதோ அரிதான பரிசைக் கொண்டு தருவதாகத்தான் நினைக்கிறார்கள். அது பாலின்பமாய் இருந்தாலும்கூட. பாலின்பமென்பது ரொட்டியைப் போல – சாதரணமானது, ஆனால் அத்தியாவசியமானது.’

’ஓ அது இல்லாமலும் சமாளிக்கலாம்’ என்றாள் அவள். ’அப்படி சமாளிப்பவர்கள் சிலரை எனக்குத் தெரியும்.’

டோனால்ட் வாழ்க்கையில் ஆகச் சிறந்தவற்றைப் பெறவேண்டும் என்று அவளிடம் சொன்னேன். அவனை நான் நேசித்தேன். அவனிடம் குறைபாடுகள் உண்டென்றால், நான் அவற்றைக் கவனிக்கவே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். குழந்தைகளிடம் குறைபாடுகள் எதுவுமில்லை, மிகவும் மோசமான குழந்தைகளிடம்கூட, என்பது என் நம்பிக்கைகளில் ஒன்று.

டோனால்ட் மிகவும் திறமைவாய்ந்த சிறுவன் – என் பிள்ளைகளைப் போல. ஆனால் அவர்களைவிட இலகுவான மனநிலை அமையப்பெற்றவன். இந்த ஒரு காரணத்தால், அவனை வாசிக்கும் மட்டத்துக்கு எடுத்துச் செல்லவேண்டும் என்று அந்த வீட்டில் எனது வாசத்தின் இரண்டாவது நொடியிலேயே முடிவெடுத்தேன். புத்தகங்களையும் செய்திப்பத்திரிகைகளையும் வைத்துக்கொண்டு கற்றுக்கொள்வோம் என்று அவனிடம் சொன்னேன். அவன் உடனே பேட்டை நூலகத்துக்குச் சென்று, என்னை மகிழ்த்தும்விதமாக சில கடினமான நூல்களைக் கொண்டுவந்தான். ஹூலியஸ் லெஸ்டரின் ”கருப்பின நாட்டார் கதைகள்” மற்றும் ”தள்ளுவண்டிப் போர்”. இரண்டாவது நூல், வேறு பேட்டையைப் பற்றியதாக இருந்தாலும் எங்களுக்கு மிகவும் பொருத்தமானது.

படிப்பையும் எழுத்தையும் பற்றி நாங்கள் பேசும்போது டோனால்ட் எப்போதுமே நான் சொல்வதை ஆமோதித்தான்.. நான் கவிதையைப் பற்றி பேச்செடுத்தால், தனக்கு அதைப் பற்றி எல்லாம் தெரியுமென்றும் தன் இரண்டாம் வகுப்புக்குப் பாடமெடுக்க டோனால்ட் ஹெண்டர்சன் என்ற புகழ்பெற்ற கருப்பினக் கவிஞர் வந்திருந்தார் என்றும் அறிவித்தான். இவ்வாறாக, அவனைப் பற்றி தெரிந்துகொள்ளும் என் ஆர்வத்துக்கு மேலாகவே தன்னைப் பற்றி டோனால்ட் எனக்குத் தெரிவித்தான். வழக்கமாக அவன் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவதிலேயே தன் நேரத்தில் பெரும்பகுதியைச் செலவழித்தான். அந்த மூன்று உம்மணாமூஞ்சி பெண்குழந்தைகளையும் கட்டாயமாகச் சிரிக்கவைப்பதற்காக அவர்களுக்கு விதவிதமாக அழகு காட்டுவதற்கும் அவன் நிறைய நேரத்தைச் செலவழிக்கவேண்டியிருந்தது. ஆனால் கவிதை பற்றிய பேச்சு எழுந்தவுடனேயே அப்போதுதான் மொழியும் நிகழ்வும் பிரவேசித்திருந்த காற்றிலிருந்து ஒரு கவிதையை எடுத்துக் கொடுக்க அவனால் முடிந்தது.

ஒரு எடுத்துக்காட்டு: அன்று காலை அவனுடைய அம்மா சொன்னாள்: ’இந்த வீட்டுல நான் சுத்தம் செய்ய மூத்திரமும் பீத்துணியும் அழுக்குத்துணியும் நிறையவே கிடக்கு. எனக்கோ சும்மா அந்த ஜன்னல்கிட்ட உட்கார்ந்து ஓய்வெடுக்கணும் போலிருக்கு.’

டோனால்ட் உடனே ஒரு கவிதை எழுதினான்:


எனக்கு, மூத்திரத்தில் தோய்ந்த பீத்துணியும் அழுக்குத்துணிக்கு மேல் அழுக்குத்துணியும், நிறையவே இருக்கு. சும்மா அந்த ஜன்னல் பக்கம் உட்கார்ந்து வெளியே பார்க்கணும். அங்கே எதுவும் இல்லை.


’டோனால்ட்,. நீ அதிபுத்திசாலி’ என்றேன். ’நான் உன்னை என்னிக்கும் மறக்கமாட்டேன். நீயும் என்னை மறந்துடாதே!’


’அவனோட நீ ரொம்பத்தான் கொட்டம் அடிக்கறே’ என்றாள் திருமதி லுட்டி.

’அவன் இதுக்குள்ளேயே அவனோட பாட்டியை மறந்துட்டான்.. அவளைப் போல் ஒருத்தியை நீ பாத்திருக்க முடியாது. அவ உதட்டைத் தாண்டி ஒரு சாபம்கூட வெளியே வந்ததில்ல.’

’எனக்கு அவள நினைவிருக்கு, அம்மா. எனக்கு நல்லா நினைவிருக்கு. அவ படுத்திருக்கிறா, அதோ அங்கே. கதவுகிட்ட ஒரு ஆள் நின்னுட்டிருக்கான். அவ சொல்றா: எஸ்ட்ராஸ், உன் தல மேல சாபம் இட்டிருக்கேன். நாளைக்கு உன் நெலம மோசமாயிடும். அவ ஏன் அப்படிச் சொன்னா?’


’கொமோரா. அவ கொமோராவைத்தான் சொன்னதா நினைக்கிறேன்’ என்றாள் திருமதி லுட்டி. ’அவளுக்கு பைபிள் தலைகீழ்ப் பாடம்.’


’அவங்க உன்னோடதான் இருந்தாங்களா?’

’இல்லை. விருந்தாளியாத்தான் இருந்தா. அவ எங்களையெல்லாம் விசாரிக்க இங்கே வந்திருந்தா. அவ குழந்தைங்கள்ளாம் எப்படி இருக்காங்கன்னு. பாக்குறதுக்கு. இங்கே இருக்கற இடமெல்லாம் சுத்திப் பாக்கறதுக்கு. அப்புறம் தரைல நீட்டிப் படுத்துண்டு செத்துப் போயிட்டா. அவளுக்கு ரொம்ப வயசாயிடுச்சு.’

அம்மாக்களுடைய சாவை முன்னிட்டு நான் அமைதி காத்தேன். திருமதி லுட்டி யோசனையாக என்னைப் பார்த்தாள்; பிறகு தொடர்ந்தாள்.

’என் அம்மாவுக்கு என்னிடம் சொல்றதுக்கு நெறைய கதை இருந்துச்சு. அந்தக் கதைங்களை சொல்லித்தான் என்னை வளத்தா. அவளோட அம்மா ரொம்பச் சின்னவ; துளிக்கூட வெவரமே இல்லாதவ. நாள் முழுக்க கட்டைவிரலைச் சூப்பிகிட்டு குடிசை வாசலிலேதான் நின்னுக்கிட்டிருப்பா,. அது அடிமைங்க இருந்த காலம். ஒரு நாள் தோட்டத்துலேருந்து ஒரு சின்னப் பையன் புயலா ஓடி வர்றான். தான் பாத்த முதல் குடிசையோட கதவைத் தட்டி, உரக்கக் கத்தறான்: ”அக்கா, வெளியே வா. இனிமே விடுதலை.” அவள் வெளியே வர்றா. ”அப்படியா? எப்போ?”-ங்கறா. அவன் சொல்றான்: ”இப்போ! இப்பவே விடுதலையாயிட்டோம்!” அப்புறம் அவன் அடுத்த குடிசையோட கதவைத் தட்டிச் சொல்றான்: ”அ!க்கா! விடுதலையாயிட்டோம்! இப்பவே!” ஒரு குடிசையிலிருந்து அடுத்த குடிசைக்கு ஓடறான். ”அக்கா, இனிமே நாமெல்லாம் விடுதலை”னு கூவறான்.’

’ஓ! எனக்கு அந்தக் கதை நெனவிருக்க’ என்றான் டோனால்ட். ’இப்ப விடுதலையாயிட்டோம்! இப்ப விடுதலையாயிட்டோம்!’ அவன் மேலும் கீழும் குதித்தான்.

’பையா, உனக்கு ஒண்ணும் நெனவிருக்காது. போ. போய் எலுவாசைத் தூக்கிட்டு வா. அவளுக்கும் இந்த நல்ல நேரம் பத்திக் கேக்கணுமாம்.’

எலுவாசுக்கு இரண்டு வயது, ஆனால் வயதுக்கு ஏற்ற வளர்ச்சி இல்லை. ’எங்ககிட்ட வந்தபோதே அப்படித்தான் இருந்தா’ என்றான் டோனால்ட். அவளுக்கு ஐஸ்க்ரீமும் பச்சை காய்கறிகளும் வாங்கித்தர திருமதி லுட்டி என்னை அனுமதித்தாள். ’கீரையும் முட்டைகோசும் வரும்னு அவ காத்திட்டிருக்கா. முட்டகோசுக்கு குளிர் பிடிக்கும். ஆனா நவம்பர் மாசம் நீ இங்க இருக்கப்போறதில்ல’ என்றாள் அவள்.

’இல்லை. இல்ல.’ தனிமை உணர்வு என்னைத் தீண்ட, நான் முகத்தைத் திருப்பிக் கொண்டு எங்கள் எலுவாஸ் பாடலைப் பாடினேன்:


எலுவாசுக்குத் தேனீக்கள் பிடிக்கும் தேனீக்கள் ரீங்கரிக்கும் எலுவாசைப் போல.

அப்போது எலுவாஸ் விரிந்துபோயிருந்த அந்தத் தரையெங்கும் தவழ்ந்தாள், ஆவேசமாக ரீங்கரித்துக்கொண்டே.

ஓ, பித்துப் பிடிச்ச குட்டியே’ என்றான் டொனால்ட். ’ரீங், ரீங், ரீங்.’

திருமதி லுட்டி ஜன்னலருகே உட்கார்ந்துகொண்டாள்.

’நீங்கள்லாம் ரொம்ப கூப்பாடு போடுறீங்க’ என்று சோகமாகக் கூறினாள். ’எவ்வளவு சத்தம்!’

மறுநாள் காலை திருமதி லுட்டி என்னை எழுப்பினாள்.

’கிளம்பற நேரம் வந்துடுச்சு’ என்றாள்.

’எங்கே?’

’வீட்டுக்கு.’

’என்னது?’ என்றேன்.

’உம், உன்னோட செல்லப் பசங்க உனக்காக அழுதுக்கிட்டிருப்பாங்கன்னு உனக்குத் தோணலையா? அம்மா எங்கேன்னு ஜன்னல்கிட்ட நின்னு காத்துக்கிட்டிருப்பாங்க. நீ போறதுக்கு நேரம் வந்தாச்சு, அம்மிணி. இது இலவச விடுமுறை இல்லம் இல்லையே?. நாங்களும் கொஞ்ச நேரம் தனியா இருக்கணுமில்ல?’

’ஒ, அம்மா’ என்றான் டோனால்ட். ’அவங்க ஒண்ணும் தொந்தரவு பண்ணலையே.’

’போடா. போய், எலுவாசைத் தூக்கிட்டு வா’ என்று கத்தினாள். ’உன் வாயையும் பட்டன் போட்டு மூடிக்கோ.’

அவள் எனக்கு காபி தயாரித்துக் கொடுக்கவில்லை. எப்போதும் என்னைக் கண்டிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள். நானும் திருப்பி அவளைக் கண்டிப்பாகப் பார்க்க முயன்று தோல்வியடைந்தேன், ஏனெனில் அவளுடைய தோற்றத்தை நான் மிகவும் நேசித்தேன்.

டோனால்டுக்கு கண்ணில் நீர் சுரந்துவிட்டது, ஆனால் கதவருகே நிகழ்ந்த பிரிவின் இறுதித் தருணம் வரை முகத்தை அவன் பக்கம் திருப்ப எனக்குத் தைரியம் வரவில்லை. அப்படியும் அவனுடைய தலை உச்சியை சற்று அழுத்தமாகவே முத்தமிட்டேன். ’சரி, பிறகு சந்திப்போம்.’

வீட்டின் முன்வாசற்படியில் ஐந்தாறு குடும்பஸ்தர்களும் சிறுவர்களும் யார் எந்த ஜன்னல் வழியே குப்பையைத் தெருவில் வீசியிருக்கக்கூடும் என்பதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொருத்தரும் அடுத்தவர் மேல் மிகவும் அசூயையாக உணர்ந்தார்கள்.

அழகான டாஷிகி அங்கியை அணிந்திருந்த இரு இளைஞர்கள் பரஸ்பரம் கலந்தாய்வும் ஆமோதிப்புமாக தெருமுனையில் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரு கருத்தை இரண்டாகப் பிரித்தார்கள்.

‘வெள்ளைக்காரப் பெண்மணிகளுக்கு ஏன் சொத்தைப் பற்கள்? ஏன் கிழவிகள் போன்ற தோற்றம்?’

’உஷ்!’ விளக்கடியே காத்திருந்த இளம்பெண் அவர்களை எச்சரித்தாள்.

நான் நடந்துகொண்டே அவர்களைக் கடந்தேன். ஓஷியன் பார்க்வேயில் சிறிது தூரம் சென்றபின் சாலை அகலமாக விரியும் வரை நான் ஓடத் துவங்கவில்லை. என் உடல் சற்று விறைப்பாக இருந்தது, ஏனெனில், எப்போதாவது தேநீர்ப் பாத்திரத்தையோ கத்தியையோ குழந்தைகளுக்கு எட்டாத தூரத்தில் வைப்பதற்காக உடலை நீட்டுவது போன்ற சிறிய அசைவுகளே என் வாழ்முறைக்குப் போதுமானதாக இருந்தன. ஏறக்குறைய ஆயிரம், ஆயிரத்தைந்நூறு மீட்டர்கள் ஓடியிருப்பேன். சிறிது நேரம் மூச்சிரைப்புக்குப் பின் திரும்பவும் நன்றாக மூச்சுவிட முடிந்தது. இது ஓட்டக்காரர்களிடையே நன்றாக அறியப்பட்ட செந்நிலைக் கட்டம்; இதுவே பறத்தலின் துவக்கம்.

நான் தெருவுக்கு வராமல் இருந்த இந்த மூன்று வாரங்களில் ஓடுவது, மக்களுக்கு விருப்பமான ஒரு நடவடிக்கையாக மாறியிருந்தது. தனக்கு விருப்பமானதைச் செய்யும் ஒரு நபராகத்தான் நான் தோன்றினேன் என்றாலும் என் ஓட்டம், அமெரிக்கர்களின் பெரும்பாலான தனிப்போக்குடைய நடவடிக்கைகளைப் போலவே, அப்போதைக்கு நான் மேற்கொள்ளக்கூடிய ஆக நவநாகரீகமான நடவடிக்கையாகவும் இருந்தது.. இரு இளைஞர்கள் என்னுடனேயே கிட்டத்தட்ட ஒரு மைல் தூரம் ஓடி வந்தார்கள். அவர்கள் என் பக்கத்திலேயே அமைதியாக ஓடி வந்து, பின் ’எச்’ நிழற்சாலையில் திரும்பிவிட்டார்கள். எதிர்த்திசையில் தாறுமாறாக ஒடிக்கொண்டிருந்த ஒரு மீசைதரித்த கனவான் என்னைப் பார்த்து உற்சாகமாக கையாட்டினார். ’ஹை, சென்யோரா!’ என்று கூவி அழைத்தார்.

என் வீட்டுக்கருகில் இருக்கும் பூங்காவனம் வழியே ஓடினேன். இந்தப் பூங்காவனத்தில்தான் என் பிள்ளைகளை வார இறுதிகளிலும் கோடைகால பிற்பகல் நேரங்களிலும் காற்றாட அழைத்துச் சென்றேன். வடகிழக்கிலிருந்த விளையாட்டு மைதானத்தருகே சற்று நின்றேன். அங்கே தங்கள் சிறார்களைப் புத்திசாலித்தனமாகக் கையாண்டுகொண்டிருந்த பத்து-பன்னிரண்டு இளம் தாய்மார்களைச் சந்தித்தேன். அவர்களை எதிர்காலத்துக்குத் தயார்ப்படுத்தும் முகமாக, ஆனால் அவர்களைப் புண்படுத்தும் நோக்கம் அறவே இன்றி, அவர்களிடம் சொன்னேன்: ’பதினைந்து வருடங்களுக்குப் பிறகு நீங்கள் அனைவருமே என்னைப் போல் இருப்பீர்கள், அனைத்திலும் தவறாக.’

என் வீட்டில் அப்போது சனிக்கிழமை காலை நேரம். ஜாக் வழக்கம்போல் கடுகடுப்பான முகத்துடன் திரும்பிவந்திருந்தான். ஆனால் இம்முறை சிறிது பணமும் ஒரு தூசகற்றும் கருவியும் கொண்டுவந்திருந்தான். வடிகட்டியில் காபி இறங்கிக்கொண்டிருந்தபோது ரிச்சர்டுக்கு அதை எப்படிப் பயன்படுத்துவது என்று காண்பித்தான். புழுதி படிந்த சுவரில் கட்டம் போட்டு அவர்கள் டிக்-டாக்-டோ விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

’ஆஹா! யார் வந்திருக்கா, பாரு! ஹை!’ என்றான் ரிச்சர்ட்.

’செய்தி ஏதாவது?’ என்று கேட்டேன்.

’அப்பாவிடமிருந்து ஒரு கடிதம்’ என்றான். ’ஏரியும் நீரும் நிறைந்த சிலெ நாட்டிலிருந்து. அது மின்னசோட்டா மாநிலத்தைப் போல் இருக்கிறது என்கிறார்.’

’அவர் மின்னசோட்டாவுக்குப் போனதேயில்லை’ என்றேன். ’ஆண்டனி எங்கே?’

’நான் இங்கேதான் இருக்கிறேன்’ என்றபடியே காட்சியளித்தான், டாண்டோ என்றழைக்கப்படும் ஆண்டனி. ’ஆனால் நான் இப்போது வெளியே கிளம்பிக்கொண்டிருக்கிறேன்.’

’அப்படியா?’ என்றேன். ஓவ்வொரு சனிக்கிழமையும் அவன் அவசர அவசரமாகத் தன் காலைச் சிற்றுண்டியை முடித்துக் கொள்வான், அல்லது சாப்பிடாமலேயே கிளம்பிவிடுவான். அன்று பல்வேறு நிறுவனங்களில் வசித்துவரும் தன் நண்பர்களைப் பார்க்கப் போவான். அந்த நிறுவனங்கள், பெல்வ்யூ, ஹில்சைட், ராக்லேண்ட் ஸ்டேட், மத்திய இஸ்லிப், மான்ஹாட்டன் போன்ற புகழ்பெற்ற மனநோய் இல்லங்கள். இந்த சந்திப்புகள் அவனுடைய முழு நாளையும் சில சமயம் பாதி இரவையும்கூட எடுத்துக் கொள்ளும்.

சாமானறையில் சில சாக்கலேட் பிஸ்கட்டுகளைக் கண்டெடுத்திருந்தேன். ’இதை எடுத்துக்கொண்டு போ, டாண்டோ’ என்றேன். என் நினைவில் அவனுடைய எல்லா நண்பர்களும் இன்னும் சிறுவர் சிறுமியராய் குதித்துக்கொண்டும், தாண்டிக்கொண்டும், தாவிக்கொண்டும் பிஸ்கட் சாப்பிட்டுக்கொண்டும் இருந்தனர்.

அவனுக்குக் கோபமாய் வந்தது. ’நோ!’ என்றான். ’அந்த சிறைச்சாலைகளில் சாக்கலேட் பிஸ்கட்டுகள்தான் அதிகமாகக் கிடைக்கும். பணம் இருக்குமா உன்னிடம்?’

ஜாக் தூசகற்றும் கருவியை கீழே போட்டான். ’இல்லை, பணத்துக்கெல்லாம் அவர்களுக்குப் பெற்றோர் இருப்பார்கள்’ என்றான் அவன்.

’இதோ. சிகரெட்டுக்கு ஐந்து டாலர். ஆளுக்கு ஒரு டாலர்’ என்றேன் நான்.

’சிகரெட்!’ ஜாக் அலறினான். ’நாசமாப் போச்சு! கருத்த நுரையீரல்களும் சாவும்! புற்றுநோய்! மூச்சிரைப்பு!’ வேகமாக மூச்சு விட்டுக்கொண்டே சமையறையை விட்டு உரத்த காலடி ஓசையுடன் வெளியேறினான். பின்னறையிலிருந்து மிதிவண்டியை எடுத்துக்கொண்டு சென்ட்ரல் பார்க்குக்கு கிளம்பினான். சென்ட்ரல் பார்க்கில் கார்களுக்கு அனுமதி இல்லை; ஆனால் மிதிவண்டி ஓட்டுபவர்களுக்கு அனுமதி உண்டு. அவன் கிளம்பிப்போய் பத்து நிமிடங்கள் சென்றபின் ஆண்டனி சொன்னன்: ’மிதிவண்டிப் பாதை ஞாயிற்றுக்கிழமைதான் திறந்திருக்கும்.’

’நீ அப்போதே சொல்லியிருக்கலாமே? நீ ஏன் அவனிடம் சரியாக நடந்துக்க மாட்டேங்கற?’ என்று கேட்டேன். ’அது எனக்கு முக்கியம்.’

’ஓ ஃபெய்த்.’ மிகவும் உயரமாக வளர்ந்துவிட்ட ஆண்டனி, அதனாலேயே என் தலையை லேசாகத் தட்டிவிட்டுச் சொன்னான்: ’எத்தனை காற்று அங்கே! அது அவனுடைய நுரையீரல்களுக்கு நல்லது; தசைகளுக்கும் நல்லது. கவலைப்படாதே, சீக்கிரமே திரும்பி வந்துவிடுவான்.’

’நீயும் மிதிவண்டி ஓட்டணும்’ என்றேன். ’உன் கால்கள் குழைந்து போகக் கூடாதில்லையா? வாரம் ஒரு முறையாவது நீச்சலுக்குப் போகணும் நீ.’

’எனக்கு நேரமே இல்லை’ என்றான் ஆண்டனி. ’என் நண்பர்களைப் பார்க்கப் போகணும்.’

தன் படுக்கைக்கடியில் தூசகற்றிக்கொண்டிருந்த ரிச்சர்ட் அப்போது சமையலறைக்கு வந்தான். ’இன்னுமா இங்கே இருக்கே, டாண்டோ?’

’போறேன், போறேன், போய்க்கொண்டே இருக்கேன்’ என்றான் ஆண்டனி. ’கண்ணைக் கொட்டாதே, போயிடுவேன்.’

’இதைக் கேளு’ என்றான் ரிச்சர்ட். ’இது ஜூடிக்காக ஒரு கடிதக்குறிப்பு.. நீ ராக்லேண்ட் வரை போனா அவகிட்ட குடுத்துடு. மறக்காதே. அதைத் திறக்காதே, படிக்காதே. அவன் படிப்பான்னு எனக்குத் தெரியும்.’

ஆண்டனி ஒரு புன்னகையுடன் வெ;ளியேறிவிட்டு, கதவை அறைந்து சாத்தினான்.

’நான் எடை குறைந்துவிட்டேனா?’ என்று கேட்டேன்.

’ஆம்’ என்றான் ரிச்சர்ட். நீ நல்லாத்தான் இருக்கே. எப்பவுமே நீ பாக்குறதுக்கு மோசமாக இருந்ததில்லே. ஆனா நீ எங்கே போயிருந்தே? எனக்கு ராஃப்டெரியோட வேகவெச்ச உருளைக்கிழங்கு ரொம்ப அலுத்துபோச்சு. நீ எங்க இருந்தே, ஃபெய்த்?’

’நான் என் பழைய அபார்ட்மெண்டில மூணு வாரம் தங்கினேன். அங்கேதான் உன் தாத்தா பாட்டியுடன் நானும் ஹோப்பும் சார்லசும் நாங்கள் சின்னப்பிள்ளைகளாக இருந்தபோது தங்கியிருந்தோம். ரொம்ப நாள் முன்னாடி நான் உன்னை அங்கே கூட்டிப் போயிருந்தேன். அந்த இடம் .கடலிலிருந்து அவ்வளவு தூரமில்ல, அங்கேதான் உன் பாட்டி வெயிலையும் காற்றையும் ஊட்டி எங்கள ஆரோக்கியமா வளத்தா.’

’நீ என்ன சொல்ல வரே?’ என்றான் ரிச்சர்ட். ’இந்தக் குழந்தைப் பேச்செல்லாம் என்கிட்ட பேசாதே.’

அன்று மாலை, ஆண்டனி எதிர்பார்த்ததற்கு முன்பாகவே வீட்டுக்குத் திரும்பிவிட்டான். அவனுடைய சில நண்பர்கள் அதிர்ச்சி வைத்தியத்தில் இருந்தார்கள்; சிலர் ஓடிப் போய்விட்டார்கள். நான் சொல்வதை அவன் சற்றுநேரம் கேட்டுக்கொண்டிருந்தான். அப்புறம் அவனும் ’அவ என்ன சொல்றான்னு எனக்கும் புரியலை’ என்றான். ஜாக்கும் அதையேதான் சொன்னான். சில நாள் பிரிவுக்குப் பின் தோன்றும் அன்பு உருவாக்கிய புரிதலையும் மீறி. ’இன்னொரு தடவை சொல்லு’ என்றான், அவன் நல்ல மூடில் இருந்தான். ’விருப்பமிருந்தால் நீ ரெண்டு தடவை கூட என்கிட்ட சொல்லாம்’ என்றான்.

நான் என் கதையைத் திரும்பவும் சொன்னேன்.

’என்னது?’ என்றனர் அனைவரும்.

ஏனெனில், வழக்கமாக இந்தக் கதை இவ்வளவு எளியதாக இருப்பதில்லை. தற்காலத்தில் இப்படி எல்லாம் நடக்கிறதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நடுவயதின் ஆவி பறக்கும் ஆற்றலுக்குள் ஒரு பெண் ஓடிக்கொண்டே இருக்கிறாள். அவளுடைய குழந்தைப் பருவம் நிகழ்ந்த வீடுகளையும் தெருக்களையும் கண்டடைகிறாள். அங்கே அவள் வாழ்கிறாள் உலகத்தில் அடுத்து வரப்போவது என்ன என்பதை இன்னும் ஒரு குழந்தையாக இருப்பவளைப் போலவே அவள் தெரிந்துகொள்கிறாள்.


0 comments

Recent Posts

See All

Protector

Comments


bottom of page